அந்தமான் கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழகம் மற்றும் கேரளம் வழியாக தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு
நாளை தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் வருகிற 28-ஆம் தேதியன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு
இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் வருகிற 29-ஆம் தேதியன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் எனவும்,இது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையக் கூடும் என்றும் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
