கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவல் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். 

Continues below advertisement

எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது ஆட்சியர் புகாரளித்த நிலையில், 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி ஸ்ருஷ்டி சிங்கையும், கண்காணிப்பு அதிகாரியாக ஐஜி காமினியையும் நியமித்த உயர்நீதிமன்றம் டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பாக அறிக்கையளிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து காவல்துறை தரப்பில் தவெக எம்.எல்.ஏவுக்கு சம்மன் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.   

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு  

பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Continues below advertisement

எம்.எல்.ஏ வீட்டின் முன் போலீசார் குவிப்பு

இந்நிலையில் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் வீட்டின் முன்பாக சில காவலர்களே முதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.