இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 


கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த முதலியார்குப்பத்தில் மாணவர்களின் நலனுக்காக இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நவம்பரில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. 


கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் இருந்ததால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டில் இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 


பள்ளிக்கல்வித்துறை  சார்பில் தொடங்கப்படும் இத்திட்டம் 1.70 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு  இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக இன்று விழுப்புரம், மதுரை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுகல், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இந்த திட்டமானது  செயல்படுத்தப்பட உள்ளது. பின்னர் மீதமுள்ள 26 மாவட்டங்களில் இந்த திட்டம் அடுத்தகட்டமாக தொடங்கப்பட உள்ளது. இல்லம்தேடி கல்வி திட்டமானது 92,297 கிராம பகுதியில் வசிக்கும் 34,05,856 மாணவ மாணவிகள் இதன் மூலம் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




இல்லம் தேடிகல்வித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறி முறைகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன் படி, கற்பித்தல் மையங்கள் பாதுகாப்பான, சுகாதாரமான, குழந்தைகள் அணுக கூடிய வகையில் தேர்வு செய்யப்பட வேண்டும். போதுமான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் இடம் மதச்சார்பற்ற மற்றும் பாகுபாடு அற்ற இடமாக இருக்க வேண்டும். அரசு கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் போன்ற இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.


தன்னார்வலர்களின் கல்வித் தகுதியைப் பொறுத்தவரை 12-ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் கற்பிக்க தகுதியுடையவர் ஆவர். அதே பகுதியைச் சேர்ந்த பெண் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 20 குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட வேண்டும்.வகுப்புகளுக்கான பாட திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்கும். வகுப்புகள் தினமும் மாலை 5 மணி இரவு 7 மணிவரை ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட வேண்டும்.


தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படும். ஊக்கத்தொகையும் உண்டு. மாநில அளவிலான இந்த திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடைபெறும் என வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இந்நிலையில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.