சென்னை ஐஐடியில் ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மன உளைச்சலுடன் அவர் இருந்ததே தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 


மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீவன் சன்னி, சென்னை ஐஐடி கல்லூரி விடுதியில் தங்கி முதுநிலை ஆராய்ச்சி 2 ஆம் ஆண்டு படிப்பைப் படித்து வந்துள்ளார்.


மாணவர் ஸ்ரீவன் சன்னி படிப்பில் சிறந்து விளங்கியவராக இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று மாலை 4 மணி அளவில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 6 மணி அளவில் அவரின் உடல், உடற்கூராய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மாணவர் ஸ்ரீவன் சன்னியின் தற்கொலை குறித்து கோட்டூர்புரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 


ஸ்ரீவன் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். படிப்பில் கவனம் செலுத்த முடியாததால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்டத் தகவல் தெரிவிக்கிறது. எனினும், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


அதேபோல கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் வீரேஷ் (19) என்பவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஐஐடி கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் மன அழுத்தப் பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளதாகவும், அதற்காக வழங்கப்பட்டிருந்த மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாணவர் வீரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


ஐஐடி நிர்வாகம் விளக்கம்


இது தொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’’எம்.எஸ். முதுநிலைப் பட்டப் படிப்பில் மின்னணு மற்றும் மின்னியல் பொறியியல் பிரிவில் 2ஆம் ஆண்டு படித்துவந்த மாணவரின் உயிரிழப்பு அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நல் வாழ்வை மேம்படுத்துவதற்கு ஐஐடி சென்னை கல்வி நிறுவனம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான உறுதியையும் வழங்குகிறது’’ என்று சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.





 


எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.




தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)