ஐஐடி சென்னை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சி மூலம், முதன்முறையாக ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வருமானத்தைக் கடந்துள்ளது.
ஐஐடி சென்னை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதன்முறையாக 2021-22ம் நிதியாண்டில் மட்டும் ரூ.1,000 கோடி நிதி மற்றும் வருவாயை உருவாக்கியுள்ளது. மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து ரூ.768 கோடி நிதியாகவும், ரூ.313 கோடி தொழிலக ஆலோசனை வாயிலாகவும் இந்தத் தொகை பெறப்பட்டு உள்ளது.
கம்ப்யூட்டிங், மற்றும் 5 ஜி ஆகிய துறைகளின் வளர்ச்சி காரணமாக, தொழில்துறை மற்றும் மத்திய- மாநில அரசுகள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை உருவாக்குவதில் ஐடி மெட்ராஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து இந்த வருவாய் பெறப்பட்டுள்ளது.
ஐஜடி மெட்ராஸ் தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சி மையத்தின் (Industrial Consultancy and Sponsored Research - ICSR) பேராசிரியர் மனு சந்தானம் தலைமையிலான குழுவினர் அர்ப்பணிப்புடன் இதற்கான ஒத்துழைப்புகளை செயல்படுத்தி வருகின்றனர்.
2021-22ம் ஆண்டில் நிதி அதிகரிப்பதற்குக் காரணமான முக்கிய திட்டங்கள்:
* பேராசிரியர் கே.மங்கள சுந்தர், பேராசிரியர் அருண் தங்கிராலா ஆகியோர் தலைமையில் 'டைரக்ட்-டூ- ஹோம் (DTH) முறையில் தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பக் கல்வி' - ரூ.300.28 கோடி
* பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியன் தலைமையில் 'சாலைப்பாதுகாப்புக்கான திறன்மிகு மையம் (CoERS)- ரூ.99.5 கோடி
* பேராசிரியை ஹேமா ஏ.மூர்த்தி தலைமையில் 'இந்திய மொழிகளில் பேச்சுத் தொழில்நுட்பங்கள்' - ரூ.50.6 கோடி
* டாக்டர் மிதேஷ் கப்ரா தலைமையில் 'இந்திய மொழித் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தரவுத் தொகுப்புகள் மற்றும் வரையறைகளை சேகரித்தல்' - ரூ.47 கோடி
ஐஐடி சென்னையின் சாதனை குறித்து அதன் இயக்குநர் பேராசிரியர் காமகோடி கூறும்போது, "நம் கல்வி நிறுவனத்தில் அதிநவீன மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராயச்சி மையத்தின் செயல்திறன் மிகுந்த ஊக்கம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.
தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சியை மேம்படுத்த ஐஜடி சென்னை மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளை விளக்கி ஐஐடி சென்னை முதல்வர் (ஐசிஎஸ்ஆர்) பேராசிரியர் மனு சந்தானம் கூறும்போது,"அண்மையில் தொடங்கப்பட்ட ஆன்லைன் பிஎஸ்சி உள்பட என்பிடெல் கடந்த
சில காலமாக மேற்கொண்டுவரும் திட்டங்களால் ஐஐடி சென்னை நாட்டின் டிஜிட்டல் கல்வி மையமாகத் திகழ்கிறது.
தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சியில் நாட்டிலேயே முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறோம். இன்னும் வளர்ச்சிபெற வாய்ப்புள்ள கம்ப்யூட்டடிங், 5ஜி ஆகிய துறைகளில் பெரும் மதிப்புள்ள திட்டங்கள் கிடைத்திருக்கினறன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த நிதியுதவியின் வளர்ச்சி விகிதம் 5-ல் இருந்து 8 சகவீதமாக உயர்ந்துள்ளது. ” என்று குறிப்பிட்டார்.