சேலம் இரும்பாலை சாலையில் சேலம் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இங்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ரூ.21 இலட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு கறவை மாடு கடனுதவிகளும், ரூ.6.30 இலட்சம் மதிப்பில் கறவை மாடுகள் பராமரிப்பு கடனுதவிகளும், ரூ.27.13 இலட்சம் மதிப்பில் செயற்கைமுறை கருவூட்டல் உபகரணங்களும், ரூ.37.60 இலட்சம் மதிப்பில் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம் என மொத்தம் ரூ.92.03 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். பின்னர் அமைச்சர்கள் இருவரும் பால் பண்ணை முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பால்பண்ணைக்குள் புதிதாக பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட அமைச்சர்கள் பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டர் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், புதிதாக சேலம் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் பால் பவுடர் உற்பத்தி நிலையம் மூன்று மாடியில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோன்று ஏழு லட்சம் லிட்டர் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி அமைந்த பின் 24 புதிய திட்டங்கள் புதிதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்னதாக இவை அனைத்தும் முடிக்கப்படும். முதல்வர் இதனை திறந்து வைப்பார் என்றார்.
ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களைத் தவிர வேறு பொருட்களை விற்பனை செய்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பாலகங்களில் இடுப்புகள், பிஸ்கட் வகைகள், நெய், பால் என ஆவின் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும். இதைத் தவிர வேறு பொருட்களை விற்பனை செய்பவர்கள் வேறு இடங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதே போல் ஆவின் பாலகங்களில் சுத்தமில்லாமல் இருந்தால் உடனடியாக தகவல் கொடுக்கும் வேண்டும். ஈரோட்டில் இரண்டு ஆவின் பாலகங்களில் சுத்தமில்லாமல் செயல்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகார் தெரிவிப்பவர்கள் பெயர் குறிப்பிடாமல் கூட அதிகாலை 2 மணிக்கு படித்து காலைக்குள் சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
கொள்முதல் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு, ஆவின் மக்களுக்காக செயல்படும் நிறுவனம். முதல்வர் ஏழை எளிய மக்களுக்காக ஆவினை நடத்தி வருகிறார். இதில் உற்பத்தி செய்பவர்கள் மற்றும் நுகர்வோர் என இருவரும் சாதாரண மக்கள்தான். மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் செலுத்தினால் 29 பைசா மட்டுமே கொடுக்கின்றனர். ஆனாலும் முதல்வர் ஆவினருக்கு பணம் ஒதுக்கி வருகிறார் என்று கூறினார்.
புதிய திட்டங்களைப் பொறுத்தவரை எதுவும் இல்லை. மக்களுக்கு தடையில்லாமல் ஆவின் பால் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக 24 நிறுவனங்கள் வர உள்ளது என்றார்.
ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் 1.75 ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.