Ration Card Bio-Metric: குடும்ப அட்டை உறுப்பினர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டைகள்:


அரிசி மற்றும் பருப்பு போன்ற பல அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வாங்கவும், பொங்கல் பரிசு போன்ற அரசின் பல திட்டங்களை அணுகவும் குடும்ப அட்டை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் கடைகள் புழக்கத்தில் உள்ளன. அதில் அரிசி அட்டை, சர்க்கரை அட்டை என பல விதங்கள் உள்ளன. 


பயோமெட்ரிக் கருவி:


இதனிடையே, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அரசின் திட்டங்கள் உரிய பயனாளர்களுக்கு, சரியான முறையில் சென்றடைவதை உறுதி செய்ய ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவுகள் உள்ளன. அதன்படி, குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து, பொருட்களை வாங்க முடியும். ரேஷன் கடைக்கு நேரில் வந்து வாங்க முடியாத மாற்று திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர், உரிய படிவத்தை சமர்பித்து வேறொரு நபர் மூலம் பொருட்களை வாங்க முடியும்.


சர்ச்சையான நடைமுறை:


இதனிடையே, குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வந்து,  கைரேகையை பதிவு செய்து அட்டையில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில் அந்த நடைமுறை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் அந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் இந்த நடைமுறை வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படும் என ரேஷன் கடை பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


ரேஷன் கடை ஊழியர்கள் சொல்வது என்ன?


புதிய நடைமுறை தொடர்பாக பேசிய சில நியாயவிலைக் கடைப் பணியாளர்கள், “வங்கிகளில் பின்பற்றப்படும் வாடிக்கையாளர்களின் விவரத்தை உறுதி செய்யும் நடைமுறையே நியாயவிலைக் கடைகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் உள்ள ஒட்டுமொத்த அட்டைதாரர்களின் பெயர், அட்டை எண் உள்ளிட்ட விவரம் வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் தரப்பட்டுள்ளது. இதை உறுதி செய்து அளிக்கும்படி உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.


பொதுமக்கள் அதிர்ச்சி:


சில ரேஷன் கடைகளில் உறுப்பினர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்யாவிட்டால், அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறும் காலம் என்பதால், வெளியூர்களில் தங்கி பயின்று வரும் மாணவர்கள் எப்படி தங்களது அடையாளத்தை உறுதி செய்ய முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தை உரிய முறையில் பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.