மக்களவைத் தேர்தலில் நாங்கள் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 


முன்னதாக, அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது மட்டும் இல்லாமல், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், ஓ. பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியுள்ளது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இது தொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ. பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில், ”அதிமுகவின் கடந்த கால வரலாற்றில் எங்களுக்கு மிகவும் முக்கிய பங்கு இருந்துள்ளது. எங்களது மனசாட்சிப்படி இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கவேண்டும். இதுமட்டும் இல்லாமல் அதிமுக கட்சி விதிகளின் படியும் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தினை எங்களுக்குத்தான் வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் உள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி இல்லை. வரும் மக்களவைத் தேர்தல் என்பது மத்தியில் யார் ஆட்சி அமைக்கவுள்ளார்கள் என்பதை தீர்மானிக்கவுள்ளது. எனவே மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையும். தமிழ்நாட்டிற்கு வரும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்.


அண்மையில் அதிமுகவின் இருந்து பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். பன்னீர் செல்வம் தரப்பு அதிமுகவில் இணைய சட்டப்போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தயாராக இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் முன்னாள் இந்நாள் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் பழனிசாமிக்கு ஆதரவு பலம் அதிகமாக உள்ளது. இதனிடையேதான் பன்னீர் செல்வத்தை நீக்கி விட்டதால் தென் தமிழ்நாட்டில் வாக்குகளை இனி அதிமுக பெறுவது கஷ்டம் என பேசப்பட்டது. இது முற்றிலும் தவறு என்று என்று நிரூபிக்கும் வகையில் மதுரையில் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி தனது தலைமையிலான அதிமுகவை தற்போதுவரை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். 


கட்சியின் அடையாளங்களை பன்னீர்செல்வம் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டதை எதிர்த்து, மேல் முறையீடு செய்தார் பன்னீர் செல்வம். இருப்பினும், சின்னம் மற்றும் கொடி தொடர்பான அனைத்து விஷயங்களும் தற்போது தேர்தல் ஆணையத்தின் பக்கமே உள்ளது.


ஓபிஎஸ்-க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி:


சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து ஓ.பன்னீர் செல்வம் சவால் ஒன்றை விடுத்தார். அதில்” எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது என்னென்ன செய்தார் என எனக்கு நன்றாகத் தெரியும், நான் கையெழுத்து போட்ட பின்னர்தான் அனைத்து கோப்புகளும் போகும், தான் வாய் திறந்தால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறைக்கத்தான் செல்ல வேண்டும். அரசாங்க ரகசியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கிறேன்” என தெரிவித்திருந்தார். 


அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமியும், “ வாய் திறந்து காமியுங்கள், பார்க்கலாம்” என்று ஓபிஎஸ்-க்கு சவால் விட்டார்.