பாயாசமா? பாசிசமா?: திரைமறைவில் பினாமி தலைவர்கள்: விஜய்யை தாக்கிய பாஜக.!

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தியாக பாஜக அமைக்கின்ற கூட்டணி இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

Continues below advertisement

பாசிசமா? பாயசமா? மதவாதமா? மிதவாதமா? மதுவிலக்கு மாநாடா? மகளிர் மாநாடா? என்று தமிழக மக்களை குழப்பி,திரை மறைவில் இருந்து எய்யப்படும் அம்புகளாக விளங்கும் பினாமி தலைவர்கள், தங்களுக்கே புரிதல் இல்லாமல் பேசி வருகின்றனர் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

”அரசியலுக்கு தயாராகிவிட்டார் முதலமைச்சர்”

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் விலைவாசி உயர்வு, சொத்துரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் ஆசிரியர்கள்,டாக்டர்கள், உள்ளிட்ட பிரச்னைகள் மற்றும் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம்,நல்ல குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட மத்திய மோடி அரசின் மக்கள் நல திட்டங்களை கொண்டு போய் சேர்க்காமல் செங்கலை வைத்து விதண்டாவாத அரசியல் செய்வது, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மாநில முழுவதும் உள்ள அரசு துறைகளில் உள்ள நிர்வாக சீர்கேடுகள் மக்கள் படும் துன்பங்கள் என மக்கள் நலத்தைப் பற்றி கவலைப்படாமல் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள். 200 தொகுதிகளை திமுக கட்சி வெல்ல வேண்டும், என்று தேர்தல் அரசியலுக்கு முதலமைச்சர் தயாராகி விட்டார்.

பாஜக கடமை:

தமிழக அரசியலில் 75 ஆண்டு கால எதார்த்த தேர்தல் அரசியலுக்கு முடிவு கட்டி, சுயநல ஓட்டு வங்கி அரசியலுக்கு சாவு மணி அடித்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் மகிழ்ச்சிக்கும் தொலைநோக்குடன் செயல்படக்கூடிய ஒரு நல்ல ஆட்சியை உருவாக்க வேண்டிய கடமை தமிழக பாஜகவிற்கு உள்ளது.

அதற்கு முன்னோட்டமாக 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாக்காளர்கள் தமிழக பாஜக அமைத்த கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்தனர். பாஜக வெற்றி பெறவில்லை என்றாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தியாக பாஜக அமைக்கின்ற கூட்டணி இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

விஜய்யை தாக்கிய பாஜக:

 பாசிசமா? பாயசமா? மதவாதமா? மிதவாதமா? மதுவிலக்கு மாநாடா? மகளிர் மாநாடா? என்று தமிழக மக்களை குழப்பி,திரை மறைவில் இருந்து எய்யப்படும் அம்புகளாக விளங்கும் பினாமி தலைவர்கள், தங்களுக்கே புரிதல் இல்லாமல் பேசி வருகின்றனர். இவர்களை தமிழக மக்கள் முழுமையாக புரிந்து கொள்ளாமல் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படாது என தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யை மறைமுகமாக தமிழக பாஜக தாக்கியுள்ளது.

”காலம் வந்துவிட்டது”

நடிகர்,இயக்குனர், தேச தலைவர்களின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தும் சாதியக் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும்,  தமிழக மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், கொள்கைகளும் கோட்பாடுகளும் இல்லாமல், அரசியல் வியாபாரத்திற்கு சாதகமாக, அனைத்து கட்சியில் உள்ள ஒரு சில சிறப்பு அம்சங்களை, முக்கிய கோரிக்கைகளை மட்டும் காப்பி அடித்து தேர்தல் அரசியலுக்கு வேகமாக தயாராகி வருகின்றனர்.

ஒவ்வொரு கட்சியிலும் நடக்கும் நிகழ்ச்சிகளில் கட்டவுட் வைக்கப்படும் தலைவர்களின் இதயமே நொறுங்கிப் போகும் அளவிற்கு, விதவிதமான வியாக்கியானங்கள் பேசி, சுயநல அரசியல் செய்பவர்களுக்கு, தமிழக மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

நாளுக்கு ஒரு பேச்சு பேசும், அரசியல் வியாபாரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒவ்வொரு வீட்டிலும் பொறுப்புள்ள வாக்காளர்கள் உருவாக வேண்டும் எனவும் தமிழ்நாடு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement