Annamalai: பாஜகவுடனான கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை சரியான நேரத்தில் பதில் தரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது:
அதிமுக தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இதனால், அதிமுக கூட்டணயில் பாஜக இல்லை என்று அதிமுக தலைவர்கள் கூறிக் கொண்டு வந்தனர். நேற்று கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்தே ஆக வேண்டும். அதிமுக தலைமையில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை தனித்தே உருவாக்குவோம் என பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் கூறினர்.
இதனை அடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
”யாத்திரையில் பாலிடிக்ஸ் பேசமாட்டேன்"
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது, பத்திரையாளர்கள் கூட்டணி முறிவு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "நான் யாத்திரையில் இருக்கிறேன். இதில் அரசியல் பேச மாட்டேன்” என்று கூறினார்.
மேலும், "அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதற்கான காரணத்தை அவர்களது அறிக்கையில் பார்த்தேன். இதுகுறித்து தேசிய தலைவர் பேசுவார்கள். அவர்கள் தான் சரியான நேரத்தில் பதில் தருவார்கள். பாஜக ஒரு தேசிய கட்சி. எனவே, கூட்டணி முடிவுகளை தேசிய தலைமை தான் பதில் தரும்” என கூறினார். இதை தவிர வேறு எந்த கருத்தையும் சொல்லாமல் அண்ணாமலை சென்றுள்ளார்.
என்ன நடந்தது?
அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக, பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து கூட்டணியில் சலசலப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் கூட, முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர். வார்த்தை போரின் உச்சக்கட்டமாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஜெயக்குமார் அறிவிப்பு வெளியிட்டார். இதனால், இருகட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கருத்து மோதல்களில் ஈடுபட்டு விமர்சித்துக் கொண்டனர்.
அதேநேரம், அண்ணாமலை பேசுவது சரியில்லை அவருடன் தான் மோதலே தவிர, பாஜக உடன் கிடையாது என சில அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசினர். இதனிடயே, அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க முயற்சித்தனர். இருப்பினும் அவர்களுக்கு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.