இந்து கோயில்கள் வழிபட அனுமதி மறுப்பது வேண்டுமென்றே பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் நடவடிக்கை - எச்.ராஜா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராசா 64 வது பிறந்தாள் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறும் போது, ”ஹிந்து சமுதாயத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடந்து வரும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். தமிழ்நாடு கேரளா போல ஹிந்து சிறுபான்மை மாநிலமாக மாறி விடக்கூடாது என்ற கவலையில் 7 ஆண்டுகளாக வெளிப்படையாக தெரிவித்து வருகிறேன். திரைப்படங்கள் மூலம் ஹிந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துதல் கேலி செய்யும் தாக்குதல்கள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் சாதாரண சட்ட ஒழுங்கு பிரச்சனையை சாதி பிரச்சினையாகி கலவரத்தை உண்டாக்குகின்றன. இதற்கென சில கட்சிகள் இருக்கு” என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காக்க சமூக விரோத ரவுடிகளை கைது செய்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு திருமாவளவன், வன்னிஅரசு போன்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது சரியா? சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல்துறை ஜாதி பார்த்து ரவுடிகளை கைது செய்யவில்லை என்று கூறினார்
மேலும், ருத்ர தாண்டவம் திரைப்படம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இப்படத்தில் மதரீதியான தாக்குதல் யார்மீதும் இல்லை ஒருவர் மதம் மாறிவிட்டால் பட்டியலின மக்கள் பெரும் சலுகைகளை பெற முடியாது என்பது சட்டம் என்பதற்கு முக்கியத்துவம் இப்படத்தில் உள்ளது.
இப்படம் பற்றி செய்தியாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தவறான வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. அமைச்சர் வி கே சிங்கும் இதே வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அர்த்தம் புரியாமல் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் வருத்தமான விஷயம்தான். நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிபீடியாவில் விளக்கம் இருக்கிறது. சிலருக்கு எச்.ராஜா மட்டுமே டார்கெட் என்று கூறினார்.
மேலும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பவன் எச். ராஜா என்றார். உள்நோக்கத்தோடு ஒரு சிலர் ஆளுநர் பதவியை பற்றி அநாகரிகமாக பேசுவதை அனுமதிக்க முடியாது. முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மிகப்பெரிய சமூகப் பின்னணி கொண்டவர் நேர்மையானவர். மேலும், ஐபிஎஸ் அதிகாரி தமிழகத்திற்கு ஆளுநராக வருவது புதிது அல்ல என்று கூறினார். தமிழ்நாட்டில் குழந்தைகள் பூங்கா, தியேட்டர்கள், மால்கள் திறந்துள்ளது. இந்து கோயில்கள் குறிப்பிட்ட சில நாட்கள் வழிபட அனுமதி மறுப்பது வேண்டுமென்றே பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் நடவடிக்கை ஆகும். தமிழ்நாடு கோயில்களில் வழிபட தடை விதித்துள்ளதற்கு மக்களும் மகேசனும் தண்டனை வழங்குவர். கோயில்கள் வழிபட தடை அறிவிப்பை கைவிட வேண்டும். உடனடியாக எல்லா நாட்களிலும் கோயில்கள் வழிபட திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எச் ராஜா வேண்டுகோள் விடுத்தார்.