ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்திரகுமாரி 1991-96-ஆம் ஆண்டுவரை சமூக நல அமைச்சராக இருந்தபோது, அறக்கட்டளை தொடங்குவதாக கூறி அரசிடம் இருந்து நிதி பெற்று ரூ.15.45 லட்சம் வரை ஊழல் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில், வெங்கடகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டார். ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.
திடீர் நெஞ்சுவலி: இந்நிலையில், தீர்ப்பு அளிக்கப்பட்ட சில நிமிடங்களில் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக, சிகிச்சைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து இநதிரகுமாரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் அடையாளம் காணப்பட்டு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற இந்திரகுமாரி தமிழக சட்டமன்றத்துக்கு அதிமுக சார்பில் நாட்ராம்பள்ளி தொகுதியில் இருந்து 1991 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அரசில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 முதல் 96 வரை பொறுப்பு வகித்தார். பின்பு, அதிமுக வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட இவர், 2006ல் திமுகவில் இணைந்தார். இந்திரகுமாரியை கட்சிக்கு வரவேற்று பேசிய கருணாநிதி, " இந்திரகுமாரி பேசும்போதுபுத்துணர்ச்சியும், புதிய எழுச்சியும் தமிழகத்தில் உருவாகிறது. அதை நான் அப்படியே ஆமோதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
திமுகவின் இலக்கிய அணி செயலாளராக பொறுப்பு வகிந்து வந்த அவர், பல்வேறு கூடங்களையும், புகழஞ்சலி நிகழ்வையும் சிறப்பான முறையில் நடத்தியவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நுால்களை, அரசுடைமையாக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.