முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலினின் தங்கை மகன் திருமணம் சென்னையில் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தனது அம்மாவுக்கு மேடையில் ஒரு சர்ப்ரைசை கொடுத்ததுடன், மணமாகனான கருணா ரத்தினத்தை கலாய்த்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவின் இரண்டாது தங்கையான ஜெயந்தி -சரவணன் தம்பதியின் மகன் கருணா ரத்தினத்துக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திருமணம் நடைபெற்றது.


தனது சித்தி மகனுக்கு நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறும் என தாம் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்றும் காதல் திருமணம் தான் நடக்கும் என எதிர்பார்த்ததாகவும் உதயநிதி கூறினார். உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சை கேட்டு மேடையில் இருந்த மணமக்கள் குடும்பத்தினர் உட்பட திமுக முக்கியப் பிரமுகர்கள் சிரித்தனர்.



ஆடம்பரமாக கட்சியினர் அனைவரையும் அழைத்து தேவையற்ற நெரிசலை ஏற்படுத்தாமல் மிகவும் எளிய முறையில் குடும்ப உறவுகள் மற்றும் ஆ.ராசா, பொன்முடி, துரைமுருகன், எ.வ.வேலு உட்பட திமுகவில் உள்ள சில முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது சித்தி மகனும், மாப்பிள்ளையும் ஆகிய கருணா ரத்தினத்தை தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் கலாய்த்தார்.


தனது தம்பிக்கு சத்தியமாக நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கும் என தாம் எதிர்பார்க்கவில்லை என்றும், காதல் திருமணமாக தான் இருக்கும் என எண்ணியதாகவும் தெரிவித்தார். அதேபோல் தனது சித்தியும், சித்தப்பாவும் இதுவரை ஒருமுறை கூட கோபப்பட்டு பார்த்ததில்லை எனத் தெரிவித்தார். அதேவேளையில் தனது அம்மா துர்காவுக்கும் அவரது மூத்த சகோதரியான சாருமதிக்கும் கோபம் வரும் என்றும் எப்போதுமே பரபரப்புடனே இருப்பார்கள் எனவும் கூறிய உதயநிதி, தனது இரண்டாவது சித்தியான ஜெயந்தியை பொறுத்தவரை மிகவும் அமைதியான நபர் எனக் கூறினார்.



இதேபோல் தனது வீட்டுக்கு அவரது மனைவி கிருத்திகா மருமகளாக வந்தவுடன் தனது அம்மா தன்னுடைய கோபத்தை முற்றிலுமாக கைவிட்டுவிட்டார் எனவும் பேசினார். அதோடு இதனை அப்பா, அதாவது முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா என்று தெரியவில்லை என்று கூறியதும் முதல்வரும் கூடியிருந்தவர்களும் சிரித்தனர். மனதில் தோன்றியதை ஒளிவு மறைவின்றி உதயநிதி பேசியதை கேட்டு திருமண விழா மேடையில் இருந்தவர்களும், வாழ்த்த வந்தவர்களும் கரவொலி எழுப்பி பாராட்டினர்.


இதனிடையே தனது தாயார் துர்கா ஸ்டாலினுக்கு திருமண விழா மேடையில் வைத்து உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி, இதற்காகத்தான் இந்த தேதியில் திருமணம் வைத்தார்களா என்று அவரையும் களாய்த்தார். அவரை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலினும், அந்த விழா மேடையில் தனது மனைவி துர்காவுக்கு வாழ்த்துக் கூறியது குறிப்பிடத்தக்கது.