வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகில் செதுக்கரை விநாயகபுரம் என்ற ஊரில் உள்ள மகாவீர் நகரைச் சேர்ந்தவர்தான் பாலசுப்பிரமணியம். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் பணியாற்றி அதன் பிறகு ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலசுப்ரமணியனுக்கும் இசைவாணி (எ) வான்மதிக்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையில் இவர்களின் ஒரே மகள் லாவண்யா தனது கணவருடன் கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாலசுப்ரமணியன் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தபடியே அவருக்கு தேவையான பணிகளை செய்துவந்துள்ளார் மனைவி வான்மதி. 


இந்நிலையில் விடியற்காலையில் வான்மதிக்கு தீடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்தார். ஆனால் மனைவி இறந்தது தெரியாமல் அவர் அருகில் தூங்கிக்கொண்டிருந்த பாலசுப்ரமணியன் காலையில் மனைவி மூச்சு பேச்சின்றி இருந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். அவருடைய அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் வந்து பார்த்தபோது ஏற்கனவே வான்மதி இறந்திருந்தது தெரியவந்தது. 




இதனை தொடர்ந்து உடனடியாக மகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர் வருவதற்கு காலதாமதம் ஆனதால் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை உறவினர்களே செய்து முடித்தனர். ஆனால் பாலசுப்பிரமணியன், மனைவியின் உடலின் அருகே அழுதபடி உறைந்த நிலையில் உட்கார்ந்திருந்தார். அதன்பிறகு சடங்குகள் முடிந்து மாலை நேரத்தில் வான்மதியில் உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஆனால் பாலசுப்பிரமணியம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை. 


30 ஆண்டுகள் தன்னை பிள்ளைபோல பேணிக்காத்த மனைவியின் பிரிவை தாங்கிக்கொள்ளமுடியாத பாலசுப்ரமணியம், வான்மதியின் உடல் மயானம் சென்றடைவதற்கு முன்பாகவே அவரும் காலமானார். மனைவி இறந்த தூக்கம் தாளாமல் கணவரும் அன்றே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.