மனித உரிமை ஆணையம் தரப்பில் தகுந்த விசாரணை நடத்தப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார். 


தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது. 


அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமைச்செயலக அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. 17 மணி நேர சோதனைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அப்போது தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறவே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள் நேரில் சென்று பார்த்தனர். 


இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தும் அவரை துன்புறுத்தியதாக குறிப்பிடப்பட்டது. கைதின் போது சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், மனித உரிமை மீறல் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் பார்த்த போது கைதின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர் என குறிப்பிட்டனர்.


இந்த புகார்களின் அடிப்படையின் இன்று ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.


அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் சோர்வாக காணப்பட்டார், இருந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் கைது செய்த போது கடுமையாக நடத்தப்பட்டதாகவும், தரையில் தள்ளப்பட்டதால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அவருக்கு இருக்கும் இதய நோய் பற்றியும் சிகிச்சை பெற்று வருவதால் பேச முடியவில்லை எனவும் குறிப்பிட்டார். ஒரு சில அதிகாரிகளின் பெயர் அவர் கூறியுள்ளார் மேலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மனித உரிமை ஆணையம் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்படும். நேற்றைய தினம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நேரில் வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.


Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் உறுதி .. நிராகரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு