இ பதிவு முறை அமலுக்கு வந்துள்ள நிலையில் அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுக்க முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளதாக தமிழகத்துக்குள் வரவும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 



முன்னதாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதுமானது. காரணத்தை தெரிவித்து விட்டு செல்லலாம். ஆனால் கொரோனா பாதிப்பு உயர்ந்ததாலும் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படாததாலும் உத்தரவுகள் கடுமையாக்கப்பட்டன. 


அதன்படி, பயணம் மேற்கொள்ள விரும்புவோர் , தேவைப்படுவோர் இ-பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இ பதிவு முறையில் மொத்தமே நான்கு விஷயங்களுக்கு மட்டுமே பதிவு செய்ய முடிவதாலும் சிலவற்றுக்கு என்ன ஆவணத்தை தருவது என்ற குழப்பம் இருப்பதாலும் விளக்கம் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 



குறிப்பாக, 
• திருமணம்
• இறப்பு
• முதியோர் பராமரித்தல்
• மருத்துவ அவசரம்



இந்த நான்கு காரணங்களுக்கு மட்டுமே இ பதிவு முறையில் நாம் விண்ணப்பிக்கலாம். அதில் இறப்புக்கு செல்ல நினைப்போர் உடனடியாக இறப்புச் சான்று எப்படி பெற முடியும் என கேள்வி எழுந்துள்ளது. முதியோர் பராமரித்தல் என்றால் அதற்கு என்ன ஆவணங்கள் பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் வேலை நிமித்தமாக செல்வோர், அழைப்பிதழ் இன்றி நிகழ்வுகள் நடத்துவோர் எந்த ஆவணத்தை பயன்படுத்துவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது பற்றி அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.