அன்றைய இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிராமணர்கள் பெருமளவில் இடம் பெற்றிருப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன், இந்தத் துறைகளில் மக்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் எனவும் சென்னை மாகாண பனகல் ராஜா தலைமையிலான நீதிக் கட்சி அரசு இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்தது.


இடஒதுக்கீடு மூன்று வகைப்படும். அவை, அரசியலில் இடஒதுக்கீடு (தனித் தொகுதிகள்), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு. 




மொத்த மக்கள் தொகையில் பிராமணர்கள் கிட்டத்தட்ட 3 சதவீதத்தினர். 89 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அது. சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று, மதராஸ் மகாண அரசு 1921-இல் சாதி வாரியான இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசாணை வெளியிட்டது. அதன்படி, அரசுப் பணிகள்,கல்வி, உள்ளவைகளில் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு 44 சதவீதமும், பிராமணர்கள், இஸ்லாமியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோர்களுக்கு 16 சதவீதமும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு 8சதவீதம் என இடஒத்துகீடு வழங்கியது. இங்கிருந்து தொடங்கியதுதான் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு வரலாறு.


சுதந்திர இந்தியாவில், இடஒதுக்கீடு நடைமுறைகள் மாற்றப்பட்டன. கர்நாடகா, மஹாராஷ்டிட்ரா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்கள் 50 சதவீதம்  இடஒதுக்கீடு வழங்க முயறி செய்து கொண்டிருந்த காலத்தில், நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் தான் 69 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. பல போராட்டங்களுக்கு விளைந்த பயனாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாட்டிலேயே, இடஒதுக்கீட்டில் 50%மேல் வழங்கிய முன்னோடி மாநிலம் என்ற பெருமை என்றென்றும் தமிழகத்தையே சாரும்.


அதற்குப் பின், 1970களில் தமிழ்நாட்டில் முதன் முதலில் ஏ.எம். சட்டநாதன் தலையில் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி பிற்ப்படுத்தப்பட்டோருக்கான (backward class (BC)) இடஒதுக்கீடு 25சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் / பழங்குடியினர் இடஒதுக்கீடு 16 சதவீததிலிருந்து 18 சதவீதம் ஆகவும் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இடஒதுக்கீடு 49 சதவீதம் ஆக அதிகரித்தது.


இதன் பின்னர்,1992-இல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஜெ.ஏ.அம்பா சங்கர் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நியமிக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துறையின் அடிப்படையில் 1982 -இல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இடஒதுக்கீடு 68 சதவீதம் ஆனது. மேலும், 1990ல் மதராஸ் உயர் நீதிமன்ற அளித்த தீர்ப்பின்படி, பழங்குடியின மக்களுக்கு 1 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழக அரசு நிர்ணயித்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக, தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 69 சதவீதம் ஆனது.


இதற்கிடையே, 1950 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதறகான மாணவர்களைத் தேர்வு செய்வதில் ஒரு சமூகத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்ய முடியாது என மண்டல் குழு வழக்கு தொடர்ந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்க உரிமை இருக்கிறது எனத் தீர்ப்பளித்து, இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் 15வது பிரிவில் 15(4) அறிமுகம்செய்யப்பட்டது.


 அதேபோன்று,1992 ஆண்டு மணடல் குழுவின் வழக்கின் தீர்ப்பில், ஒன்பது நீதிபதிகளை கொண்ட பென்ஞ், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 16(4)ன்படி, மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்க கூடாது என்று உத்தரவிட்டது.


ஏற்கனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 69 சதவீத இடஒதுக்கீடு முறையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கு ஏதுவாக 1993 ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசால், தமிழக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்களுக்கு (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன்வடிவு , சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டது.


பின்னர் இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 31B-ன் கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு 1994 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் (76-வது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது.


அவ்வறிக்கையில், 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்டுள்ள தமிழக சட்டம் 45/1994 எவ்வித குறைபாடும் இன்றி உள்ளது என்றும், எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவீதம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 1 சதவீதம் என்று வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் அளவு, மேற்படி வகுப்பினருடைய மக்கட்தொகையைக் கணக்கில் கொள்ளும் போது முற்றிலும் சரியானது என்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த அறிக்கை, ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழக சட்டம் 45/1994-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, 69 சதவீதம் இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது என்றும், மேலும், இட ஒதுக்கீட்டில் வளமான பிரிவினரை நீக்க வேண்டியதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.


தற்போது நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு கொள்கை பல்வேறு போராட்டங்களையும் சந்தித்துள்ளது. அப்படி, போராடியதன் விளைவாக மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. இதை நிறைவேற்றும் வகையில், 1989-இல் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 105 சமூகத்தைச் சேர்ந்தவர்களை சேர்த்து 20 சதவீதம் இடஒதுக்கீடை வழங்கியது. அதுவே, இப்போது வன்னியர் தங்களுக்கான இடஒதுக்கீடு கோருகையில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக ஆட்சியில் வன்னியருக்கு 10.5% வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போடப்பட்டது. அது தற்போது , வன்னியர்களுக்கு உள்  ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது குறிப்ப்டத்தக்கது.


தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பொதுப் பிரிவினருக்கு (OC) 31%, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 26.5%, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு (BCM) 3.5% உள் இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு (SC) 15%, தாழ்த்தப்பட்ட அருந்ததியனர் பிரிவினருக்கு (SCA) 3% உள் இடஒதுக்கீடும், பழங்குடியினர் (ST) 1% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இன்றும் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.