அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 8 மாதங்களுக்கு முன்பே முதல்வர் ஸ்டாலின் நிதி வழங்கிய நிலையில், அங்கு தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தற்போது அறிவித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


செம்மொழியான தமிழ் மொழியின் சிறப்பை தரணி முழுவதும் பரப்பும் நோக்கில் உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து  அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிதியுதவி வழங்கினார். 


ரூ.2.5 கோடி நிதி


குறிப்பாக தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஒரு தமிழ் இருக்கையை நிறுவ, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி தமிழ் இருக்கை நிறுவும் வகையில் 3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்க தமிழக அரசு ஆணையிட்டது. 


அதைத் தொடர்ந்து 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான ரூ.2.50 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின், ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி வழங்கினார்.




இதற்கிடையே பிரதமர் மோடி கடந்த 20ஆம் தேதி அன்று இந்தியாவில் இருந்து 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். இறுதி நாளான நேற்று அரசு முறை நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசினார். வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 


தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும்


அப்போது பேசிய அவர், ''பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்காவின் புதிய தூதரகங்கள் திறக்கப்படும். இந்திய அரசின் உதவியுடன், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும்'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தியா- அமெரிக்கா வெளியிட்ட கூட்டறிக்கையில், சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் இருக்கை மீட்டெடுக்கப்பட்டு, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த ஆய்வு மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே 8 மாதங்களுக்கு முன்பு ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துக்கான தமிழ் இருக்கை அமைக்க முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அளித்த நிலையில், அங்கு புதிதாக தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 


ஏற்கனவே நிதியளித்த முதல்வர் ஸ்டாலின்


இதுகுறித்து கண்ணதாசன் பிறந்தநாளுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சு., ''ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி அளித்து, அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதல்வரையும் தமிழ்த்துறை அமைச்சரையும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டும் என்று அழைத்து கடிதங்களும் அங்கிருந்து எழுதி இருக்கிறார்கள்'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 


எது எப்படியானாலும் உலகெங்கிலும் தமிழ் மொழி வளரவும், தமிழ் ஆய்விருக்கைகள் அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.