ஓசூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்தும், மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் குவிந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நகரமாக திகழ்வது ஒசூர்.  இந்த பகுதியில் உள்ள காமராஜ் காலனியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுகிறது.




அப்பகுதியின் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இந்த பள்ளியின் கட்டிடத்தின் முதல் தளத்தில் 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம்போல பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து பாடம் படித்து வந்த நிலையில், திடீரென மாணவர்கள்  அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


உடனடியாக ஆசிரியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வகுப்பறைகளிலிருந்த மாணவர்கள் வெளியே மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர். ஆனாலும், அடுத்தடுத்து மாணவர்கள் மைதானத்திலே மயங்கி விழுந்தனர். பல மாணவர்கள் வாந்தி எடுத்தனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பள்ளியின் வளாகத்தில் பதற்றத்துடன் குவிந்தனர். 





இந்த சம்பவத்தினால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பள்ளியின் வகுப்பறையின் ஜன்னல் வழியாக ஒருவித துர்நாற்றம் வீசிய காரணத்தாலே இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மாணவர்கள் திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்ததற்கு என்ன காரணம்..? திடீரென பள்ளி வளாகத்தில் வீசிய துர்நாற்றத்திற்கு என்ன காரணம்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.