மதுரை பனங்காடியை சேர்ந்தவர் செல்வராணி. இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 24). இவருக்கும் சரவணன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2019ம் ஆண்டில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ வீட்டில் இருந்து காணாமல் போனார். இதையடுத்து அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில், செல்வராணி வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


 


இதையடுத்து  அவர் சென்னையில் இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். அங்கு சென்று விசாரித்த போது, அவர் தனது பள்ளித்தோழி துர்காதேவியுடன் வாடகை வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதற்காக ஜெயஸ்ரீ தன்னை ஆண் போல சிகை அலங்காரம் செய்து கொண்டு, தன்னை ஆணாக பாவித்து கொண்டுள்ளார். பின்னர் ஜெயஸ்ரீயை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி செல்லலாம் என கோர்ட்டு தெரிவித்தது.


இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், ஆனந்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயஸ்ரீ ஆஜரானார். செல்வராணி வக்கீல் ஆஜராகி, ஜெயஸ்ரீ தன்னுடைய 2 வயது குழந்தையை தவிக்க விட்டு சென்றுவிட்டார். சட்டப்படி இது குற்றம். அவர் மீது  கிரிமினல் வழக்குபதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார். அதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஜெயஸ்ரீ மேஜர் என்பதால் அவரது விருப்பப்படி செல்ல கோர்ட்டு அனுமதிக்கிறது. மனுதாரர் புகாரை சம்பந்தப்பட்ட போலீசில் தெரிவித்து நடவடிக்கை கோரலாம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


தென் மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்...!