கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாதங்களுக்கு பிறகு ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளம் கடந்த மார்ச் மாதம் முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது. தற்பொழுது ஆறு மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான இணையதள சான்றிதழை, சோதனைச் சாவடிகளில் வழங்க வேண்டும். சுற்றுலா பயணிகள் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி கொண்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சென்று வர அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் மாலை நான்கு முப்பது மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மேலும் சுற்றுலா பயணிகள் ஆற்றிலும், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணம் மேற்கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தொடர்ர்து பரிசலில் செல்பவர்கள் கட்டாயமாக பாதுகாப்பு கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளிகள், சமையல் செய்பவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் குறைவான தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும். மேலும் சுற்றுலா தொழிலாளர்கள், வணிகர்கள், முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். தமிழக அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக பின்பற்ற வேண்டும். சுற்றுலா தளத்திற்கு தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் சுற்றுலா தளம் தூய்மையாக பராமரிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை தலைசிறந்த சுற்றுலா தளமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தருமபுரியில் எம்பி செந்தில்குமார் பேட்டியளித்தார். தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள மகளிர் விளையாட்டு விடுதியினை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். அப்பொழுது விளையாட்டு விடுதிக்கு தேவையான சுற்றுச் சுவர் அமைத்து தரவும், விடுதியில் உள்ள மாணவிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது குறித்து விடுதியில் ஆய்வு செய்தார். தொடர்ந்து விடுதியில் பணியாற்றும் அலுவலர்களிடம் மாணவிகளின் தேவை குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம் பி செந்தில்குமார் தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு விடுதியில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். தற்போது கொரெனா காலம் என்பதால், 28 மாணவிகள் மட்டுமே தங்கியுள்ளனர். இந்த விடுதியில் தங்கி பயிற்சி பெறும் மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். மேலும் விளையாட்டு விடுதியில் பெண்கள் தங்கி வருவதால், அருகில் உள்ள இடங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவது, சூதாட்டம் ஆடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் விடுதிக்கு கண்காணிப்பு கேமிரா பொருத்தவும், சுமார் 65 மீட்டர் சுற்று சுவர் இல்லாமல் இருந்து வருகிறது. அதனை உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, இரண்டு மாதத்திற்குள் கட்டித்தரப்படும்.
மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா காலம் மட்டும் இல்லாமல், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ள நேரங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுபோன்ற அசாதாரண சூழலில் பரிசல் இயக்குவதற்கும், சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனவே ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை ஒரு சர்வதேச சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து சுற்றுலாத் துறை அமைச்சர் சந்தித்து இந்த சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். மேலும் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்று தலம் மூடப்பட்டுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து திரும்பி செல்கின்றனர். மேலும் சோதனை சாவடியில் ஒரு சிலரை அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே குற்றாலம், ஒகேனக்கல் அருவிகளிகள் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் சொல்லிதிருக்கிறார். எனவே ஒகேனக்கல் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எம்பி செந்தில்குமார் தெரிவித்தார்.