போதைப்பொருள் இந்த அளவுக்கு பரவியதற்கு காரணமே மத்திய அரசுதான் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.


போதைப்பொருள் தடுப்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில்தான் அதிகமான போதை பொருட்கள் கடத்தல் நடைபெற்று வருகிறது. அதிலும், குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு நாடுகளில் இருந்து வருகிற போதைப்பொருட்கள் எல்லாம் தடை செய்யப்படுவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். துறைமுகங்கள் தனியார்மயமாக்கியதன் காரணமாக வளர்ந்து நிற்கிற போதைப்பொருட்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்பதை இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எடுத்து சொல்லியது. ஆனால், மத்திய அரசு அதை ஏற்றுக்கொண்டு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


அதனால்தான், தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் வளர்ந்து வருகின்றது. குறிப்பாக, தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு விஜயவாடா துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது. போதை பொருள் கடத்தல் சம்பவத்திற்கு விஜயவாடா துறைமுகத்திற்கும், முந்த்ரா துறைமுகத்திற்கும் தொடர்பு உள்ளது. ஆகவே, இவைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பல முறை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இது ஒரு மாநிலத்திற்கு மட்டும் உட்பட்ட விஷயம் அல்ல, பல்வேறு மாநிலங்களும் சேர்ந்து செய்கிறது. 


 தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 9.19 கோடி மதிப்பீட்டிலான 152.94 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்யபட்டு உள்ளதாவும்,240 நபர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.


ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 32.99 கோடி மதிப்பீட்டிலான 952 டன் போதை பொருட்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டு இருந்ததாக கூறிய அவர் சட்டப்பேரவையில் குட்கா குறித்து பேசியதற்கு வெளியேற்றிய நபர்கள் தற்போது தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து உள்ளது என பேசுகின்றனர் என தெரிவித்தார்.


மதுரை விவகாரத்தில் அந்த ஆடியோ உண்மையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்த அமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமா வேண்டாமா என்பது ஒவ்வொரு நபர்களின் கொள்கை சார்ந்தது என்றும் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அளித்தது அண்ணா தற்போதும் விடுமுறை அளித்து வருகிறோம் எங்களை பொறுத்தவரை அனைத்து மதமும் அனைத்து சாதியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம் என தெரிவித்தார்.


திமுகவில் முதல் பட்டதாரி யாரேனும் இருக்கிறார்களா என அண்ணாமலை கேட்கிறார் அண்ணா முதல் பட்டதாரி என்பதை அண்ணாமலை நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என தெரிவித்த அமைச்சர் நானும் முதல் பட்டதாரி தான் என தெரிவித்தார்.


புதிய கல்வி கொள்கையை பொறுத்தவரை முழுமையாக நாங்கள் எதிர்க்கிறோம் அதனை தெளிவாக முதல்வர் துணை வேந்தர் மாநாட்டில் தெளிவாக கூறிவிட்டார் என தெரிவித்து விட்டார் என கூறினார்.