வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகியிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நாட்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


காற்றழுத்த தாழ்வு பகுதி


நேற்று கோவை, மதுரையில் மிக கன மழை பெய்து பல இடங்களில் வெள்ளக் காடாக மாறின. வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியும் இப்போது புதிதாக உருவாகியுள்ள தாழ்வு பகுதி காரணமாகவும் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கன மழை பெய்யும் என கூறப்படுகிறது.


4 நாட்களுக்கு அலெர்ட் ஆக இருங்க மக்களே


இன்று உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு, மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை இது நகரகூடும் என்றும் தெரிகிறது. இதனால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


எந்தெந்த மாவட்டங்களில் அதி கன மழை


இதனால், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக் கூடும்.


மேலும் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.


அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு எச்சரிக்கை


இது தொடர்பாக தலைமைச் செயலக பொதுத் துறையில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 14ஆம் தேதியான இன்று : விழுபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இன்று மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


17ஆம் தேதி வரை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்


வரும் 17ஆம் தேதி வரை அதி கன மழை பெய்யுமென்பதால், சாலை போக்குவரத்து, மரம் விழுவதை உடனடியாக அகற்றுதல், வெள்ள நீரை, ஏரி, ஆறுகளில் திருப்பிவிடுதல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.


தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை


வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தமிழ்நாடு அரசு சார்பில் முனெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன, பேரிடர் மீட்பு படையினர் பல மாவட்டங்களில் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில்  நேற்று துணை முதல்வர் உதயநிதி நேரடியாக ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் எல்லா மாவட்ட நிர்வாகமும் மழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.