தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு அதிகமான அளவில் பதிவாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 36 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு, ஊரடங்கு காரணமாக 34 ஆயிரம் என்ற அளவில் குறைந்து வருகிறது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான அனுமதியுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தால் கடந்த 24-ந் தேதி முதல் எந்த தளர்வுகளும் இல்லாத ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.




ஏற்கனவே, கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு, தற்போதைய ஊரடங்கு மேலும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலே அமைந்துள்ளது. இதன்காரணமாக, புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் சார்பில், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அவரது அறிவிப்புக்கு இணங்க, முதல் தவணையாக தமிழகம் முழுவதும் ரூபாய் 2 ஆயிரம் நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கொரோனாவாலும், ஊரடங்காலும் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா தடுப்பு நிவாரணம் வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரேஸ் பானு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.




இந்த நிலையில், இன்று மீண்டும் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குடும்ப அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களுககு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் எனவும் கிரேஸ் பானு தரப்பில் ஏற்கனேவே மனுவில் கூறியிருந்தது போல வலியுறுத்தப்பட்டது.


இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நிவாரண உதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து, மூன்றாம் பாலினத்தவர்களின் கோரிக்கை தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.  


தமிழக அரசின் இந்த நிவாரணத் தொகை புதியதாக குடும்ப அட்டைகள் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.