அன்புத்தாயார் ஹீராபாவுடன் பிரதமர் மோடி கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அனைவருமே அறிவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் ஹீராபென் (100) இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஹீராபென் இன்று (டிச.30) அதிகாலை உயிரிழந்தார்.


இந்நிலையில், தாயை இழந்து வாடும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.


”அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தங்கள் அன்புத்தாயார் ஹீராபா அவர்களுடன் தாங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அனைவருமே அறிவோம். அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. தங்கள் தாயாரின் இழப்பினால் நான் அடைந்துள்ள துயரை விவரிக்கச் சொற்கள் இன்றித் தவிக்கிறேன்.


துயர்மிகு இந்நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். தாயாருடன் தாங்கள் கொண்டிருந்த அழகிய நினைவுகளில் அமைதியும் இளைப்பாறுதலும் பெறுவீர்களாக” எனத் தெரிவித்துள்ளார்.


 






 






ஹீரா பென்னின் இறுதி ஊர்வலம் குஜராத் காந்தி நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. குஜராத், காந்தி நகரில் உள்ள ஹீராபென்னின் உடலுக்கு மலர் வளையம் வைத்தும், அவரது உடலை சுமந்து சென்றும் பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்.


முன்னதாக தன் தாயாரின் இழப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, “ “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு வாழ்ந்து கடவுளின் காலடியை அடைந்துள்ளார். ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்ம யோகியின் அடையாளம் மற்றும் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு இந்த மும்மூர்த்திகளை என் தாயிடம் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயை சந்தித்தார். குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி, காந்திநகரில் உள்ள தனது தாயாரின் இல்லத்திற்குச் சென்ற மோடி, அங்கு தேர்தலுக்கு முன் ஆசி பெற்றார். 





முன்னதாக, ஜூன் 18ஆம் தேதி ஹீராபென்னின் 100ஆவது பிறந்தநாளில் பிரதமருடன் நேரத்தை செலவிட்டார்.