தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தென் தமிழகம், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. சென்னையில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது காணப்பட்டாலும் பெரியளவில் மழைப்பொழிவு காணப்படவில்லை. ஓரிரு தினங்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது.
இந்த நிலையில், நேற்று மதியம் திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென சென்னையில் மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலையிலும் பெய்தது. அவ்வப்போது மழை சில நிமிடங்கள் நின்றாலும் காலை வரை நீடித்தது.
சென்னை நகரின் முக்கிய பகுதிகளான வடபழனி, கோயம்பேடு, பாரிமுனை, கோடம்பாக்கம், தி.நகர், வளசரவாக்கம், கிண்டி, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, வியாசர்பாடி, ராயப்பேட்டை என்று நகரின் அனைத்து பகுதிகளிலும் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது, நள்ளிரவு முதல் பெய்து வந்த இந்த மழையால் நகரின் பல பகுதிகளிலும் சாலையில் தண்ணீர் குளம்போல தேங்கி நின்றது.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் அதிகாலையில் பணிக்கு புறப்பட்டு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை மட்டுமின்றி, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான மழை கொட்டித்தீர்த்தது. சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம், சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளிலும் மழை தீவிரமாக பெய்தது. இதனால், அந்த பகுதியில் உள்ள சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடியற்காலை வரை பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, திண்டுக்கல், வேலூர், குடியாத்தம் போன்ற பல்வேறு பகுதிகளிலும் நன்றாக மழை பெய்தது.
முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் செப்டம்பர் 22 (இன்று) திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும். சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவித்திருந்தது. இதனால், சென்னையில் இன்றும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.