தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மதுரை, தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழையின் அளவு குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை வலுவடையும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் 49% மழை அளவு குறைவாக பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலாசந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அதனை ஈடு செய்யும் வகையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாள் முழுவதும் நல்ல மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.