மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருப்பதாகவும், துயர் துடைத்திட ஓரணியாய் திரள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 


கடந்த இரண்டு நாட்களாக  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கனமழை பெய்தது. இதில் சென்னையை மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் போது அதிக அளவில் மழை பெய்ததால் மக்கள் அச்சமடைந்தனர். தமிழ்நாடு அரசும், மாநகராட்சி ஊழியர்களும் முழுவீச்சில் இரவு, பகல் பாராது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 


சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மாநகர பேருந்து, புறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள், விமானங்கள் என அனைத்து விதமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில்கள் மட்டும் ஞாயிறு கால அட்டவணைப்படி இயக்கப்பட்டது. ஆனால் சுரங்க மெட்ரோ ரயில் பாதையில் நீர் புகுந்ததால் சில ரயில் நிலையங்கள் மூடப்பட்டது. கனமழை காரணமாக இன்று விடுமுறை விடப்பட்ட நிலையில், நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 






இப்படியான நிலையில், அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது. முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம்/ தடுத்திருக்கிறோம்.


மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம். இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்! அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன். வெல்லட்டும் மானுடம்!” என தெரிவித்துள்ளார்.