தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு திசையில் நகர்ந்து நவ.18 ஆம் தேதி (நாளை) தெற்கு ஆந்திரா, வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில்,வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும்,காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நவ.18 ஆம் தேதி தெற்கு ஆந்திரா, வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை இரவு வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவலின் படி, கடந்த வாரம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழைக்கு பிறகு, வருகிற நவம்பர் 18 ஆகிய தேதிகளில் சென்னைக்கு அருகில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி முழுவதுமாக சென்னை மையத்தின் மீது விழும் வகையில் அமைத்துள்ளது. இதன் காரணமாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன்பிறகு, உண்மையான நிகழ்வு இன்று இரவு அல்லது நாளை காலை முதல் கனமழை தொடங்கும்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் தற்போது தெற்கு நோக்கி செல்வதால் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை, கடலூர் மற்றும் பாண்டிச்சேரியில் சில பகுதிகளில் மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் இருந்து 100-200 கிலோமீட்டர் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் காணப்படுகிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்