நடிகர் சூர்யா மயிலாடுதுறை வந்தால் அவரை எட்டி உதைப்பேன் என்று கூறிய பாமக மாவட்ட செயலாளர் மீது போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டில் வாழும் இருளர் பழங்குடியினர் மீதான காவல்துறையினரின் அடக்குமுறை குறித்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தில் காட்டப்பட்டிருந்த காவல்துறை அதிகாரியின் வீட்டில் வன்னியர்களின் சாதிச் சின்னம் இருந்ததாக சர்ச்சைகள் எழுந்தது. அதனையடுத்து படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் அந்தக் காட்சியில் சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிகளை மாற்றியதாக அறிவித்தார். எனினும் வன்னிய மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாக பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கம் முதலான அமைப்புகள் நடிகர் சூர்யா நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என `ஜெய் பீம்’ படத்தையும், நடிகர் சூர்யாவையும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.


இந்த படத்தில், ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியும், மறைந்த வன்னியர் சங்கத்தலைர் குருபெயரை வைத்திருப்பதாகவும் பாமகவினர் சர்ச்சையைக் கிளப்பினர். சர்ச்சைக் காட்சிகளை நீக்கிவிட்டதாக ஞானவேல் அறிவித்தார்.


காலண்டர் சர்ச்சைக்கு முடிவுகட்ட முடியாத அளவுக்கு சர்ச்சைகள் தொடர்கின்றன. இருப்பினும், நடிகர் சூர்யாவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பான பிரபல இயக்குநர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் அவருக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள், ஆங்காங்கே சில அரசியல் கட்சியினர் பகிரங்கமாகவே விடுக்கும் மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.


மயிலாடுதுறை மாவட்ட பாமக  செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ₹1 லட்சம் பரிசு என அறிவித்தார். அவர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


முன்னதாக, கடந்த 14-ஆம் தேதி மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிச்சாமி ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், "எங்களுடைய பகுதிக்கு சூர்யா வந்தால் அவரை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சமர்ப்பணமாக கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே இனி சூர்யா எங்கும் நடமாடவே கூடாது" என்று மிரட்டியிருந்தார்.


இந்நிலையில், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சித்தமல்லி பழனிச்சாமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கை வேண்டும் என சூர்யா ரசிகர்களும், ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.