மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் நிலையில், கிழக்கு மத்திய அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி வருகிறது.

  


இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 15 ஆம் தேதி ஆந்திர - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இருந்தாலும், இது சூறாவளி புயலாக மாற வாய்ப்பில்லை. கிழக்கு மத்திய அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது" என்று தெரிவித்துள்ளது. 


 






கடந்த 40 ஆண்டு காலமாக, வடஇந்திய பெருங்கடல் (North Indian Ocean) பகுதியில் சூறாவளிப் புயல்களின் தீவிரம் அதிகரித்து வருவதாக, இந்திய விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. வலுவான நடுத்தர அளவிலான  ஈரப்பதம் , நேர்மறையான குறைந்த அளவிலான  சுழல்நிலை , பலவீனமான செங்குத்து காற்று , சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை  மற்றும் அடக்கப்பட்ட வெளிச்செல்லும் நீண்ட அலை கதிர்வீச்சு  ஆகியவை வட இந்தியப் பெருங்கடலில் அதிகரித்த வெப்பமண்டல சூறாவளி அதிகரித்ததற்கு காரணம் என இந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சூறாவளியை அதிகரிக்கும் போக்கை கொண்டு வருவதில் புவி வெப்பமயமாக்கலின் பங்கு முக்கியத்துவம் பெறுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 


தமிழ்நாட்டில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்தது. 


வரும் அக்டோபர் 16ம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  மேலும்,  அக்டோபர் 15ம் தேதி  வரை தென்கிழக்கு அரபிக்கடல், கேரள மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.