புயல் எச்சரிக்கை:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றுக்கு தாழ்வு மண்டலமாக  இன்று காலை 8:30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு அருகே சுமார் 670 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

Continues below advertisement

இது தொடர்ந்து மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4ஆம் தேதி பிற்பகல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும். அதன் பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 5 ஆம் தேதி முற்பகலில் புயலாக கரையை கடக்கக்கூடும். இதனால், கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்து காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு:

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் அரசு நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Continues below advertisement

அரசு அதிகாரிகளின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகள் தத்தமது பகுதிகளில் இருந்து  மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கடற்கரை, பூங்காக்களுக்கு செல்ல வேண்டாம்”

சென்னையில் நடந்த புயல் முன்னெச்சரிக்கை பற்றிய ஆய்வுக்  கூட்டத்திற்கு பின் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேவையான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவசர தேவைகளுக்காக  ஜெனரேட்டர்கள், மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த 2 நாட்களுக்கு கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கோரிக்கையாக வைக்கிறோம். சாக்கடை குழிகளில் மழைநீர்  தேங்காதவாறு எந்திரங்கள் வைத்து அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. மழைநீர் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெற்றதால் தான் மழைநீர் வடிந்து விடுகிறது” என தெரிவித்துள்ளார்.