தமிழ்நாட்டில் நேற்றைய தினம் ஒருசில வடதமிழக மாவட்டங்களிலும், தென்தமிழக மாவட்டங்களிலும் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. அதேவேளை, ஒருசில இடங்களில் வெப்பம் தீவிரமாக வாட்டி வதைக்கும் விதமாக அதிகபட்ச வெப்பநிலை 1-2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 36.5 டிகிரி செல்சியஸ் என அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் அடுத்து வரும் நாட்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (12-10-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல, நாளை (13-10-2025) கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அக்டோபர் 18ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும். அதேபோல, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் அக்டோபர் 16ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.