Continues below advertisement

வடகிழக்கு பருவமழை - மீண்டும் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பம் மாதம் இறுதியோடு முடிவடையும். அந்த வகையில் அக்டோபர் மாதம் அதிரடியாக தொடங்கிய மழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து பெரிய அளவிலான மழை பாதிப்பானது இல்லாமல் ஒரு சில வாரங்கள் வறண்ட வானிலையே நீடித்து வந்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவடங்களில் மழையானது பெரிய அளவில் பற்றாக்குறையாக இருந்தது. அப்போது தான் இலங்கையை சூறையாடிய டிட்வா புயல் தமிகத்தை நெருங்கியது.

நவம்பர் மாதம் வரை சென்னையில் மழை இல்லாத நிலையில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் உருவான டிட்வா புயலால் சென்னையில் 4 நாட்கள் மழையானது வெளுத்து வாங்கியது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதனையடுத்து டிசம்பர் 5ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வறண்ட வானிலையே நீடித்து வந்தது. மேலும் குளிரின் தாக்கமும் அதிகமாக இருந்தது. எனவே வடகிழக்கு பருவமழை முடிவடைந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், கடந்த 155 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் வங்க கடலில் பெரிய அளவில் தாழ்வு மண்டலம் உருவாகாது என கருதப்பட்ட நிலையில், தற்போது உருவாகியுள்ள இந்த புயல் சின்னம் 21ம் நூற்றாண்டின் 6 வது புயல் சின்னம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

உருவானது புயல் சின்னம்- 4 நாட்களுக்கு கன மழை

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, , மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது, அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வரும் நாட்களில் புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஜன.9, 10 ஆகிய தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால்  ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நாளை மழை

அந்த வகையில், இன்று (8.1.2026) மாலை முதல் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் நாளை (09-01-2026) திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வருகிற 10ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் மழை எச்சரிக்கை

வருகிற 11ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இராணிப்பேட்டை, வேலூர், மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காலத்தில் இறுதி மழையாக இந்த மழை பதிவாக வாய்ப்பு உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.