குருவுக்கே சிஷ்யர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலை தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் காலமான திருவள்ளூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் மு.ஏகாம்பரம் தாயார் அபூர்வம்மாள் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்று படத்தை திறந்துவைத்து அஞ்சலி செலுத்தி உரையாற்றினார். அப்போது விசிக தொண்டர்கள் மத்தியில் பேசிய திருமாவளவன், “35 வருடம் அ போட சொல்லிக் கொடுத்த திருமாவளவனை விட்டு விட்டு, அம்பேத்கர் அரசியலை சொல்லிக் கொடுத்த திருமாவை விட்டு விட்டு ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டுமென சொல்லி கொடுத்தவரை விட்டு விட்டு திடீரென சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒருவர் கட்சி தொடங்கி விட்டார். அவரோடு போகலாம் என எப்படி நினைக்கிறீர்கள்? என கேள்வியெழுப்பினார்.
அவர் பால்வாடி பையன். நீங்க ஆய்வு மாணவர். உன்னை நான் ஆளாக்கி பிஹெச்டி படிக்க வச்சிருக்கேன். நீ போய் பால்வாடி பள்ளியில் இருப்பவர் தான் என் தலைவர் என சொன்னால் எப்படி?. அவரின் அனுபவம் உனக்கு இருப்பதை விட குறைவு தான். இனிமேல் தான் அவர் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும். நீ போய் தான் அவனுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்க வேண்டும். தலைவனுக்கே சீடர்கள் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் தான் அங்கு உள்ளது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒவ்வொருவரும் தலைவர்களாக வளர்ந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் அரசியல் விவாதத்தில் கலந்து கொள்ளும் பல பேர் ஒன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கிருந்து போனவர்களாக இருக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
சூடுபிடிக்கும் அரசியல் களம்
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் 2 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் இம்முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தொடர்வதை அக்கட்சியின் தலைவரான தொல். திருமாவளவன் பலமுறை உறுதி செய்துள்ளார். இப்படியான நிலையில் விஜய் பற்றி திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.