Salem Rain News: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகரில் உள்ள அம்மாபேட்டை, பச்சைப்பட்டி, அல்லிக்குட்டை, சிவதாபுரம், புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சொல்வது. குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தினம்தோறும் இரவு நேரங்களில் தெரியும் மழை காரணமாக தேங்கும் தண்ணீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சேலம் புதிய பேருந்து நிலையம் வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.



இதேபோன்று, நேற்று இரவு சேலம் மாநகரில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அம்மாபேட்டை பிரதான சாலையில் குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற தற்போது வரை மாநகராட்சி அலுவலர்கள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் அம்மாபேட்டை பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இது குறித்த தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அம்மாபேட்டை காவல்துறையினர் இப்பகுதியில் போக்குவரத்தை மாற்றம் செய்து சாலை மறியலில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வு செய்து தந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் எனக் கூறி பொதுமக்கள் மறியலை தொடர்ந்து வருகின்றனர். 



சேலம் மாநகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் கூறுகையில், ஏற்காடு மற்றும் சேலம் மாநகரில் கன மழை பெய்து வருவதால் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இந்த தண்ணீரை உடலுக்குடன் வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்மோட்டார்கள், ஜேசிபி இயந்திரங்கள், தூய்மை பணியாளர்கள் மூலம் வீடுகள் மற்றும் சாலைகளில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். தொடர்ந்து அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு சேலம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலாட் கொடுக்கப்பட்டுள்ளதால் அதனை எதிர்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. கனமழையால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் எந்த நேரத்திலும் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். மழை நீரை உடனுக்குடன் வெளியேற்ற 24 மணி நேரமும் களப்பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தயார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சேலம் மாநகராட்சியில் மழைநீர் தேங்கும் வகையில் காளி வீட்டுமனைகளை பராமரிக்காத உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.