சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், வடபழனி, அண்ணாநகர், மெரினா, பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தாம்பரம், கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, ராமாபுரம் மற்றும் போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்குச் செல்வோர் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோன்று புறநகர் பகுதிகளான எண்ணூர், ஆவடி, அம்பத்தூர், பூவிருந்தவல்லி, குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடரும் கனமழை காரணமாக, சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வானிலை மையம் எச்சரிக்கை:


வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செய்யூர்,கிண்டி,குன்றத்தூர்,மயிலாப்பூர்,வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.






 


பல்வேறு இடங்களிலும் மழை தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நகரின் பல பகுதிகளில் பலத்த காற்றும் வீசி வருகிறது.


அடையாறில் கனமழை:


குறிப்பாக அடையாறில் ஒரு மணி நேரத்தில் 3.7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காலை 5 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில் இந்த கனமழை கொட்டி தீர்த்தது. ஆலந்தூர், பெருங்குடி, பாலவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அடையாறில் 7.3 சென்டி மீட்டர் மழை  பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.