"செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் ஒரு சில இடங்களில், குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கிருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்"

Continues below advertisement

சென்னை புறநகரில் கனமழை

சென்னை புறநகர்ப் பகுதியான ஊரப்பாக்கத்தில் ஒரே ஒரு நாள் பெய்த மழைக்கே பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட திருவிக தெரு, செல்வராஜ் நகர் மற்றும் ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் சூழப்பட்ட ஊரப்பாக்கம்

குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், தேங்கியுள்ள மழைநீருடன் அருகில் ஏற்கனவே கொட்டப்பட்டு இருந்த குப்பையுடன் மழைநீர் சேர்ந்து, அப்பகுதி முழுவதுமே துர்நாற்றத்துடன் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

Continues below advertisement

இந்த அசுத்தமான வெள்ள நீர் தேங்கியிருப்பதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மழைநீரும் கழிவுநீரும் கலந்திருப்பதால், இது கடுமையான நோய் தொற்றுகள்  பரவுவதற்கு வழிவகுக்கும் என மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், தேங்கியுள்ள தண்ணீரில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

உடனடியாக நீரை அகற்ற கோரிக்கை

எனவே, அரசு நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, வெள்ள நீரை வெளியேற்றுவதற்கும், நோய் தொற்றுப் பரவாமல் தடுக்கத் தேவையான சுகாதார நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நிலவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்கழுக்குன்றத்தில் 11.2 சென்டிமீட்டர் மழையும், கேளம்பாக்கம் பகுதியில் 9.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டில் 2.28 சென்டிமீட்டர் மழையும், திருப்போரூரில் 2.18 சென்டிமீட்டர் மறையும், மாமல்லபுரத்தில் 10 சென்டிமீட்டர் மழையும், மதுராந்தகத்தில் 3 சென்டிமீட்டர் மழையும், செய்யூர் பகுதியில் 4 மில்லி மீட்டர் மழையும், தாம்பரத்தில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட முழுவதும் இன்று (03-12-2025) பரவலாக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.