Kanchipuram Rain : "காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது"
மழை முன்னறிவிப்பு என்ன ? TN Weather Forecast
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஒருவழியாக் டிட்வா புயலின் மிச்சமான காற்ரழுத்தத் தாழ்வு மண்டலம் பகுதியளவு கரையேறி நிலப்பகுதிக்குள் புகுந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கரையேற மேலும் சில மணி நேரங்கள் ஆகலாம். இதன் காரணமாக சென்னையின் மீது மிகவும் தீவிரமான மேகக் கூட்டம் நிலவுகிறது. இதனால் ஒட்டுமொத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலப்பகுதிக்குள் புகுந்ததன் விளைவாக திருவண்ணாமலை, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை பொழியக்கூடும். மேகக் கூட்டங்கள் கோவை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்கள் மீதும் பரவியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் நிலப்பகுதிக்குள் டிட்வாவின் மிச்சம் நுழைந்துள்ளதால், இன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழியக்கூடும் என தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட வானிலை நிலவரம் - Kanchipuram Weather Forecast Today
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை மாவட்டம் முழுவதும் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 3.34 சென்டிமீட்டர் மழையும், உத்திரமேரூரில் 3.7 சென்டிமீட்டர் மறையும், வாலாஜாபாத்தில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழை, ஸ்ரீபெரும்புதூரில் 3 சென்டிமீட்டர் மழை, குன்றத்தூரில் 2 சென்டிமீட்டர் மழை, மற்றும் குன்றத்தூர் செம்பரம்பாக்கம் பகுதியில் 1.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 3.18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை இன்று (03-12-2025) ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 2 மணி வரை கணமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதியம் 2 மணிக்கு மேல் மழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட வானிலை நிலவரம் - Chengalpattu Weather Forecast Today
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்கழுக்குன்றத்தில் 11.2 சென்டிமீட்டர் மழையும், கேளம்பாக்கம் பகுதியில் 9.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டில் 2.28 சென்டிமீட்டர் மழையும், திருப்போரூரில் 2.18 சென்டிமீட்டர் மறையும், மாமல்லபுரத்தில் 10 சென்டிமீட்டர் மழையும், மதுராந்தகத்தில் 3 சென்டிமீட்டர் மழையும், செய்யூர் பகுதியில் 4 மில்லி மீட்டர் மழையும், தாம்பரத்தில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட முழுவதும் இன்று (03-12-2025) பரவலாக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்திருப்பதால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதி கனமழை காரணமாக திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்படைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட நிலவரம் Thiruvallur Weather Forecast Today
திருவள்ளூர் மாவட்டத்திலும் இன்று (03-12-2025) கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று மாலைக்கு மேல் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.