தென் தமிழக பகுதிகளில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதல் வாரம் எதிர்பார்த்த அளவை விட அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவு இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மழையின் தாக்கம் குறைந்தது. அதேசமயம் வெயிலின் தாக்கமும் பெரிதும் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது எதிர்பாராத சமயங்களில் இலேசான முதல் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. 

Continues below advertisement

அந்த வகையில் நவம்பர் 8ம் தேதியான இன்று தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

வரும் நாட்களில் மழைப்பொழிவு

சென்னையைப் பொறுத்தவரை நவம்பர் 8ம் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும். எனினும் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் அளவையொட்டி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

நவம்பர் 9ம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்திலும் நல்ல மழையை எதிர்ப்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. இதே நிலை நவம்பர் 13ம் தேதி வரை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே நவம்பர் 11ம் தேதி வரை மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.