வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. அதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், பருவமழை தொடங்கியது முதல் மழை தீவிரம் அடைந்தது.
கடந்த ஓரிரு தினங்களாக சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை மிரட்டி வரும் நிலையில், இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் செங்குன்றத்தில் 13 செ.மீட்டரும், பெரம்பூரில் 12 செ.மீட்டரும், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் 10 செ.மீட்டரும், அயனாவரம், நுங்கம்பாக்கம், சோழவரத்தில் 8 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆலந்தூர், அமைந்தகரை, அயனாவரம், எழும்பூர், கிண்டி, தி.நகர், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அபாயம் காரணமாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.