மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும். அதேபோன்று, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கரையை நெருங்கும் மாண்டஸ் புயல்:


தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று மாலை தீவிரப்புயலாக வலுப்பெற்ற மாண்டஸ் புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08.30 மணியளவில் புயலாக வலுகுறைந்தது. அதைதொடர்ந்து, காலை 11.30 மணி நிலவரப்படி மாமல்லபுரத்தில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 180 கி.மீ. தொலைவில்  மாண்டஸ் புயல்  நிலைகொண்டுள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரை, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே,  மாமல்லபுரத்தைச் சுற்றி இன்று  நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அவ்வாறு மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது, 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை:


அதோடு,  மாண்டஸ் புயல் காரணமாக வடதமிழகத்தில் மாலை முதல் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தான், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும். அதேபோன்று, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மண்டல வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.






லேசான மழைக்கு வாய்ப்பு:


இதனிடையே, திருப்போரூர், அம்பத்தூர் பகுதிகளிலும், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிகளிலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. பொன்னேரி, திருவொற்றியூர் பகுதிகளிலும், மதுரவாயல், பூவிருந்தவல்லி மற்றும்  ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.