சென்னையில் கோடம்பாக்கம், மாம்பலம், அசோக் நகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. மதியம் சற்று நேரம் மழை விட்ட நிலையில் தற்போது மீண்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


முன்னதாக, வெளியூர்களில் இருந்து சென்னை வருவதை 2இல் இருந்து 3 நாட்கள் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தீபாவளிக்காக ஊருக்கு சென்றுள்ள மக்கள் மூன்று நாட்கள் கழித்து சென்னை வர வேண்டும் என்று சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் முதலமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் கூறினார். 


முன்னதாக, சென்னை பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேரில் சென்று ஆய்வு செய்தார். 




தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வந்த மழை, கடந்த ஓரிரு தினங்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ந் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்நிலையில் விடிய விடிய பெய்த கனமழையால் சென்னை சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. கனமழை காரணமாக சென்னை மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


1913, 04425619206, 044 - 25619207, 044 - 25619208 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.


மேலும் 9445477205 என்ற வாட்ஸ் அப் மூலமும் புகாரை தெரிவிக்கலாம்


இதனிடையே, செம்பரபாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறக்கப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து ஏற்கெனவே 500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண