தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 12-ஆம் தேதி உற்சாகமாக கொண்டாப்பட இருக்கிறது. இதற்காக கடந்த ஒரு வாரமாக புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சேலம் கடை வீதியில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நகைக்கடைகள், பட்டாசு கடைகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் நகை, பணத் திருட்டில் ஈடுபடுபவர்களை கண்காணித்து பிடிக்க சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜய குமாரி தலைமையில் சேலம் மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும், சேலம் மாநகரில் டவுன், புதிய பஸ் நிலைய பகுதிகளில் அதிகளவில் நகைக்கடைகள், ஜவுளிக் கடைகளில் மக்கள் பொருட்களை வாங்க வருகின்றனர். பணத்தோடு வருவோரிடம் அவர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு பணம், பொருட்களை திருட முயற்சி செய்யும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் சேலம் மாநகர காவல் துறை சார்பில் டவர்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகர பகுதியில் மட்டும் 700 காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சாதாரண உடையிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 10 ரூபாயை கீழே போட்டு விட்டு, கவனத்தை திசை திருப்புகார்கள், பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரின் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பாக வெளியூர் கும்பல் சேர்ந்தவர்கள் திருடுவதற்காகவே வருவார்கள் என்பதால் சந்தேகப்படும் படியான நபர்கள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவலர்களை அணுகி தெரிவிக்க வேண்டும். அதேபோல பேருந்துகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் பெண்களை கேலி கிண்டல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும். மாநகரில் 24 மணி நேரமும் 3 ஷிப்ட் அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று சேலம் மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, அருணாச்சலம் ஆசாரி தெரு, அக்ரகாரம், இரண்டாம் அக்ரகாரம், நான்கு ரோடு, ஐந்து ரோடு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகள், இனிப்பு மற்றும் கார பலகார பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்கி செல்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள சின்ன கடை வீதி, பெரிய கடை கடைவீதி போன்ற இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் சேலம் மாநகரப் பகுதியில் உள்ள போஸ் மைதானம் திடல் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் நாளை முதல் தற்காலிக பட்டாசு கடைகளில் விற்பனை தொடங்க உள்ளது.