பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இவ்வழக்கை 3 மாதங்களுக்குள் விழுப்புரம் நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. இவ்வழக்கு கடந்த 8 ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்த போது குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரின் மீதும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து படித்து காண்பிக்கப்பட்டு, அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இருவரிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு அவர்கள் அளித்த பதில்களை நீதிபதி கோபிநாதன் பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து, இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை நவம்பர் 11 ஆம் தேதி முதல் தொடங்கும் என்பதால் அன்றைய தினம் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, அவரது கணவர் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.



இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகினர். சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் ஆஜரான வக்கீல் ரவீந்திரன், இவ்வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களை கேட்டு மனுதாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், இதுபற்றி கோர்ட்டில் தெரிவித்த பிறகும் இங்கு விசாரணை நடத்தக்கூடாது என்றும் சில நாட்கள் விசாரணையை ஒத்திவைக்கும்படியும் வாதாடினார். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கலாவதி, கடும் ஆட்சேபனை செய்தார். மேலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தால் அதற்குரிய மனுவின் நகல் எதையும் விழுப்புரம் கோர்ட்டில் ஏன் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை?. அதுவும் வழக்கை விசாரிக்க எந்த தடை உத்தரவும் இல்லை என்பதால் வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என்று பதில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக சாட்சிகள் விசாரணை தொடங்கியது. இதற்காக இவ்வழக்கில் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் 2வது சாட்சியான அவரது கணவர் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகினர். பின்னர் நீதிமன்றத்தின் கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்ட நிலையில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சாட்சியம் அளித்தார். அப்போது தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து அவர் விளக்கமாக சாட்சி கூறினார். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சாட்சியளித்த போதிலும் அவரது சாட்சியம் நிறைவடையாத நிலையில் நீதிமன்ற நேரம் முடிந்து விட்டது. தொடர்ந்து அவர் மேலும் சாட்சியம் அளிக்க வேண்டியுள்ளதால் இவ்வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெறும் என நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.  


இதனை தொடர்ந்து சாட்சிகள் விசாரணை நடந்தது. இதற்காக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தனது கணவருடன் 2வது நாளாக விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் சாட்சியம் அளித்தார். அவர் அளித்த சாட்சியம் முழுவதையும் நீதிபதி பதிவு செய்துகொண்டார். 2 நாட்களும் சேர்த்து 8 மணி நேரத்திற்கும் மேலாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த சாட்சியம் நேற்று மாலை நிறைவடைந்தது.




இதையடுத்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கின் விசாரணையை திங்கட்கிழமை ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடங்கி முக்கிய சாட்சியான புகார்தாரரின் சாட்சியம் நிறைவடைந்ததையடுத்து மற்ற சாட்சிகளிடம் விரைவாக விசாரித்து முடிக்க ஏதுவாக அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.