தமிழ்நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக மாநில அரசின் சார்பில் தொடர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி நேரில் ஆய்வு செய்தார்.


பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, “தமிழ்நாட்டில் 78 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இரண்டாவது தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 12வது தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ 50 ஆயிரம் இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையைப் பொறுத்தவரை 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.




வடகிழக்கு பருவமழையின் காரணமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களில் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சில உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, தென்னாப்பிரிக்க, சீனா, போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில், இத்தாலி போன்ற வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொண்டு, அறிகுறி காணப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய சர்வதேச விமானங்கள் தரையிறங்கும் விமான நிலையங்களில் சுகாதாரத்துறையின் சார்பில் தனித்தனியே தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மருத்துவர்களோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் கடைகளுக்கு செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் முதல் தவணையாக 77.33 சதவீதம் நபர்களுக்கும், இரண்டாவது தவணையாக 42.10 சதவீதம் நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ”


இவ்வாறு அவர் கூறினார்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண