சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், சுகாதார நலப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான செயலி அறிமுக விழா, உலக புகையிலை ஒழிப்பு தினம், மாநில அளவிலான துணை இயக்குனர்களுக்கான தட்டம்மை ரூபெல்லா நோய் நீக்குதல் திட்ட பயிலரங்கம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.


அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ தமிழ்நாட்டில் ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தடையாகும் என அரசியல் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு பிரதிநிதிகள் டெல்லி சென்றுள்ளார்கள். நாளை முதலமைச்சரை சந்தித்து இது தொடர்பாக ஆலோசிக்க உள்ளோம். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இதற்கான தீர்வு எட்டப்படும். நாடு முழுவதும் 150 மருத்துவக் கல்லூரியில் மதிப்பீடு தாக்கல் செய்துள்ளனர் என தெரிய வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறிய குறைபாடுகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது, ஏற்புடையதாக இல்லை. இந்த நடவடிக்கை தேவைதானா என முறையிட உள்ளோம். இந்திய அளவில் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என அனைவரும் அறிவர். புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் திறக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது.  விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். நாமக்கல், நாகை, ஊட்டி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், ” மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்கள் கைரேகை வருகை பதிவேடு முறையாக பராமரிக்கவில்லை, சிசிடிவி கேமரா செயல்பாடுகள் சரியில்லை என சுட்டிக் காட்டிய குறைகளுக்கு உரிய பதில்கள் அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சிறு குறைகளுக்காக, பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் பெறும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அச்சுறுத்துவது போல் நடவடிக்கை எடுக்க முயல்வது தேவையற்ற ஒன்று. குறிப்பிட்ட, சிறு குறைகளுக்கும் தீர்வு காணப்படும்” என கூறினார்.


சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பேசிய அவர், “ இருவிரல் சோதனை செய்யப்படவில்லை என உறுதியான பின்னர் தேசிய குழுந்தைகள் பாதுகாப்பு ஆணைய அலுவலர் ஆளுநரை திருப்திப்படுத்த உண்மைக்கு மாறான தகவல் கொடுத்து அமைச்சராகிய என்னையும் மன்னிப்பு கேட்க சொல்கிறார். அந்த ஆணையத்தின் அலுவலர், விசாரணைக்கு பின்னர் மருத்துவரிடம் பேசிய ஆடியோ ஆதாரம் உள்ளது. தேவையென்றால் ஊடகங்கள் முன்னிலையில் வெளியிட தயார். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் கருதி இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தாமல் தவிர்க்கிறோம்” என்றார்.