• ஆகஸ்ட் 31க்குள் வெளிநாட்டுப்படைகள் திரும்பப்பெறாவிட்டால் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கப்படைகளை தலிபான் எச்சரித்துள்ளது. காபூல் விமானத்தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தலிபான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. 





  • காபூலில் இருந்து ஒரே நாளில் 10,900 பேரை 49 விமானங்கள் மூலம் அமெரிக்க மீட்டுள்ளது.
     

  • டெல்லியில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் முன்பு நேற்று ஆஃப்கான் அகதிகள் போராட்டம் நடத்தினார்கள்.இந்தியாவில் ஆஃப்கானியர்கள் வாழமுடியாது என்பதால் சர்வதேச நாடுகளுக்குப் புலம்பெயர்வதற்கான சான்றிதழை விரைந்து விநியோகிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
     

  • இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் அதனை சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்துமாறு பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். நேற்று டெல்லியில் பிரதமரைச் சந்தித்த அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சாதிவாரிக் கணக்கெடுக்குப்புக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. 


  • கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள சதீஷன், சந்தோஷ் சாமி உள்ளிட்ட 3 பேர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி சசிகலா மற்றும் சுதாகரனை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 


  • தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சுஷீல் ஹரி பள்ளி பாலியல் குற்ற விவகாரத்தில் சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீஸாரிடம் இவ்வாறு பாபா வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


  • மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக ஹரிஹர மகாதேசிக பரமாச்சாரியார் பொறுப்பேற்றுள்ளார். அண்மையில் 292வது ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் மறைந்ததை அடுத்து புதிய ஆதீனம் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


  • ’பேனர் உள்ளிட்ட ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு பலமுறை கண்டிப்புடன் வலியுறுத்தியும் ஆங்காங்கே அத்தகைய செயல்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது. கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.சிறுவன் தினேஷை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாரின் துயரில் துணைநிற்கிறேன்’ என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்ற விழா ஒன்றுக்கு கொடிகம்பம் வைத்த போது மின்கம்பி உரசி 13 வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார். 


  • டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று தொடங்கவுள்ளன. இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கவுள்ளது. தடகள வீரர் தங்கவேலு மாரியப்பன் நிகழ்வில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்கிறார். மொத்தம் 54 இந்திய வீரர்கள் இந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற