விழுப்புரம் : குற்றவாளியை பிடிக்க சென்றபோது விக்கிரவாண்டி தலைமை காவலர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக சீனிவாசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். அதிகாலையில் காவலர் சீனிவாசன் ஆவுடையார்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனைக்காக நின்றிருந்த மூன்று பேரை துரத்தி பிடிக்க சென்றபோது மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சக காவலர் சீனிவாசனை ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குற்றவாளியை பிடிக்க சென்றபோது காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Continues below advertisement

முதல்வர் நிதியுதவி அறிவிப்பு:- 

 

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்துவந்த திரு.சீனுவாசன் (வயது 40) த/பெ.சந்திரன் என்பவர் இன்று (16.3.2025) விடியற்காலை சக காவலர் திரு.மஞ்சுநாதன் என்பவருடன் தொரவி கிராமத்தில், விக்கிரவாண்டி - புதுச்சேரி மாநில நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களில் இரண்டு நபர்களை சக காவலருடன் மடக்கிப்பிடித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பின்னர் தப்பியோடிய மூன்றாவது நபரை பிடிப்பதற்காக கயத்தூர் கிராமத்தில் தேடிவந்து கயத்தூர் சுடுகாடு அருகே அந்த மூன்றாவது நபரை விரட்டிப் பிடிப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக மயங்கி கீழே விழுந்த தலைமைக் காவலர் திரு.சீனுவாசனை சக்காவலர் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தலைமைக் காவலர் திரு.சீனுவாசன் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

 

தலைமைக் காவலர் திரு.சீனுவாசன் அவர்களின் அர்பணிப்புடன் கூடிய பணி எந்நாளும் நினைவு கூறத்தக்கது. அவரது உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

திரு.சீனுவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.