மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறேம் என்பதைக் காட்ட பட்ஜெட் லோகோவில் 'ரூ' பயன்படுத்தினோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், தமிழைப் பிடிக்காதவர்கள் அதை பெரிய செய்தியாக ஆக்கிவிட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.


"பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்"


'உங்களில் ஒருவன்' கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம், பட்ஜெட்டுக்கு முன்பு நீங்கள் போட்ட ட்வீட்டே தேசிய செய்தி ஆகிவிட்டதே? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "ஒன்றுமில்லை. பட்ஜெட் logo-வை வெளியிட்டிருந்தேன். மொழிக் கொள்கையில் நாம் எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறோம் என்று காட்டுவதற்கு அதில் 'ரூ' என்று வைத்திருந்தோம்.


அவ்வளவுதான். ஆனால், தமிழைப் பிடிக்காதவர்கள் அதைப் பெரிய செய்தி ஆக்கிவிட்டார்கள். ஒன்றிய அரசிடம், நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான சம்பளத்தைத் தாருங்கள் - பேரிடர் நிதி தாருங்கள் - பள்ளிக்கல்வி நிதியை விடுவியுங்கள் என்று தமிழ்நாடு சார்பாக நூறு கோரிக்கை வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதில் பேசாத ஒன்றிய நிதியமைச்சர், இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்.


அவரே பல பதிவுகளில் என்றுதான் போட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்திலும் அனைவரும் Rupees-அ சிம்பிளா Rs. என்றுதான் எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்சினையாகத் தெரியாதவர்களுக்கு இதுதான் பிரச்சினையாக தெரிகிறது போல. மொத்தத்தில், இந்திய அளவில் நம்முடைய பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்!" என்றார்.


முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பேசினார்?


பட்ஜெட்டுக்கான பிரிப்பரேஷன் எல்லாம் எப்படி செய்தீர்கள்? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், "முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, அறிஞர்கள் ரகுராம் ராஜன், ழான் திரேஸ், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன் போன்றவர்கள் நிறைய ஆலோசனைகள் வழங்கினார்கள். மறுபுறம், அடித்தட்டு மக்களிடமும் அவர்களின் தேவைகள் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டோம் அதுமட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் மக்களிடம் நல்ல 'ரீச்' ஆன திட்டங்கள் என்ன என்று பார்த்து, அதை நம்முடைய மாநிலத்திற்கு ஏற்ற மாதிரி கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்காக, பல நாட்கள் தலைமைச் செயலகத்தில் மாலை 6 மணியில் இருந்து இரவு பத்து மணி வரை அமைச்சர்கள், அதிகாரிகள் கூட உட்கார்ந்து பேசிப் பேசித்தான் இந்த பட்ஜெட்டைத் தயாரித்தோம்" என்றார்.


பட்ஜெட் எப்படி வந்திருக்கிறது? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், "நான் என்ன சொல்கிறேன் என்பதை விட, இந்தியா முழுவதும் வெளிவரும் நாளிதழ்கள் என்ன சொல்லியிருக்கிறது என்று பாருங்கள். 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில், Budget that counts all என்று தலைப்பு போட்டு, ஒரு கோலத்தைப் போட்டு கார்ட்டுனில் அனைத்துத் திட்டங்களையும் கொண்டு வந்ததையும் சேர்த்து, அதில் வெளியிட்டிருக்கிறார்கள். 'டைம்ஸ் ஆப் இந்தியா'-வில் To checkmate opposition next year, TN Finance Minister moves infra, welfare pieces அதாவது, "எதிர்க்கட்சிகளின் அரசியல் குற்றச்சாட்டுகளை செக்மேட் செய்திருக்கிறது இந்த பட்ஜெட்" என்பதாக எழுதி இருக்கிறது" என்றார்.